16 July 2011

தொட்டிச்செடிகள் - நான்கு கவிதைகள்

தடயம்



தினம் கடக்கும் பாதையை
ஏதோ நினைத்து திரும்பி பார்த்த
வழிப்போக்கியின் நிலை இன்றெனக்கு


மலைச்சரிவு, தூரத்து பனிமூட்டம்
குளிரில் பெருத்த மரக்கிளை பறவைகள்
பனிவிழுந்த புற்களை நிமிண்டும்
கன்றுக்குட்டியின் அவசரம்,
வெள்ளை ஆந்தையின் கவனப்பார்வை


நடுவே அகலும் தார்ச்சாலையில்
ஆங்காங்கே மழைநீர் குட்டைகள்
நீரில் பட்டுத்தெறித்த வெளிச்சத்தில்
நம் கால்தடங்களின் பின்னல் கோலாட்டம்.


அங்கே கண்ணில் பட்டவை சில
நீரில் கரைந்து மறைந்தவை சில.



நெருடல்



நேற்று விழாவில் பார்த்தது
அதே முகம்தான்
சந்தேகமில்லை
அர்த்தங்கள் பொதிந்த புன்னகை
பூத்தொடுக்கையில் விட்டுவிட்ட ஊசியைபோல
இலக்கை தேடும் அலங்கார பேச்சு.
மெளனிகளை வலிய இழுக்கும்
அதிகார உடல்மொழி
இவனேதான் விஷமி

மறைந்திருந்த நினைவுச்சுருக்கம் ஒன்று
இரவு பறவையாய்
ஒரு இரைச்சலுடன் வெளியே கசிந்தது

இனி துயிலின் கருமையில்
அமைதி மட்டுமே ஒளிரும்.



தொட்டிச்செடிகள்

வெயிலுக்கு பயந்து தினமும் நம் பலகணியில்
நிழலான கூடலை தேடிக்கொண்டன அந்த ஜோடிப் புறாக்கள்
பிடிவாதமாய் மல்லிகை தொட்டிகளின் நடுவே குடைந்து
மெதுவாய் கட்டுகின்றன எளிய கூடு ஒன்றை.
குட்டிப்புறாக்களின் வரவை எதிர்நோக்கும் உன்
கண்களில் மீண்டும் ஒரு இளம் கண்ணாடி பளபளப்பு.
புறாவுடன் எனக்கான சண்டைகளை .உணரா ஜொலிப்பு அது.
அடுக்கு மல்லிகை தொட்டிகளில் படுத்துக்கொள்வது
எல்லாவிடத்திலும் இறக்கைகளை விட்டு செல்வது
சின்ன மொட்டுகளை நோண்டுவது, எச்சமிடுவது என்று
புறாக்களினால் தொல்லை பலவிதம், அறியமாட்டாய் நீ.
உனக்காகவும் காதலுக்காகவும் விட்டு வைத்த
புறா ஜோடியோ இடத்தை காலி செய்வதாயில்லை
சில காக்கைகளையும் இன்று விருந்துக்கு அழைக்கின்றன.
எங்களின் சண்டைகளெல்லாம் சரவெடிகளாய் நீளுகின்றன
புறாகாற்றை சுவாசித்த மல்லிகை செடிகளும் இப்போதெல்லாம்
இடப்பகிர்வை நினைத்து செல்லம்கொஞ்சுவதில்லை.







வெள்ளியிரவு

கோடைநாட்கள் இம்முறை அளவுக்கதிகமாய் நீண்டன
வெற்றுக் காகிதங்கள் மட்டும் கொண்ட புத்தகமாய்
காற்றுவீசாத மணிநேரங்களாய்

அடுக்கடுக்காய்

நாட்கள் தவறாது ஒன்றின்பின் ஒன்றாய் வெயிலின் அணைப்பில் கட்டுண்டன
இருண்ட கண்களை தினமும் அழுத்தியது கனவுகளின் பேயுருவம்
நிற்பதறியாமல் வழுக்கிச்செல்லும் கடிகாரமுள் தினம் ஓடுகிறது சுற்றிச்சுற்றி.
அவ்வப்போது தலையிட்டு வெம்பிய இருளை ஒற்றியெடுக்கும் நிலவோ
கடலின் நடுவே வெள்ளி துகள்களை பூசி ஒப்பனை செய்யும்.
வெண்மை குழையும் ஆழிக்கடலின் கரையில் இரவுகளை தேடுவோம்

அப்போதெல்லாம்.

No comments:

Post a Comment

You can leave your comments or simply sign here.